states

img

சிஏஏ எதிர்ப்பு போராட்டக்காரர் சந்தேக மரணம்- உரிய விசாரணை கோரி போராட இந்திய மாணவர் சங்கம் முடிவு

மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மாவட்டத்தில் சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட அனிஷ் கான் சந்தேகத்திற்குரிய வகையில் உயிரிழந்துள்ளதை அடுத்து உரிய விசாரணை கோரி போராட்டம் நடத்தப்படும் என இந்திய மாணவர் சங்கம் தெரிவித்துள்ளது.

மேற்குவங்காளத்தில், வெள்ளியன்று இரவு காவல்துறை சீருடையுடன் அனிஷ்கானின் வீட்டிற்குள் நுழைந்த நபர்கள், கானை அவரது வீட்டு மொட்டை மாடிக்கு அழைத்து சென்று கீழே தள்ளியது தான் உயிரிழப்பிற்கு காரணம் என குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

காவல்துறையைச் சேர்ந்த யாரும் கானின் வீட்டிற்கு செல்லவில்லை என தெரிவித்துள்ள காவல்துறையினர், கான் அவரது வீட்டின் அருகில் இறந்து கிடந்ததாக தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்திற்கு உள்ளூர் பகுதியைச் சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள்  காரணமாக இருக்கலாம் என காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த குற்றச்சாட்டை மறுக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர், இந்த சம்பவத்திற்கு பின்னால் ஆழமான சதி இருக்கிறது என்றும், அது மேற்கு வங்கத்திற்கு வெளியே திட்டமிடப்பட்டு இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

கொல்கத்தா அலியா பல்கலைகழகத்தைச் சேர்ந்த 500 மாணவர்கள் நடத்திய மெழுகுவர்த்தி பேரணியின் போது, காவல்துறையினருடன் மோதல் ஏற்பட்டது.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் முதன்மையாக ஈடுபட்டவரும் கொரோனா பெருந்தொற்றின் போது ஏழை, எளிய மக்களுக்கு உதவி புரிந்தவருமான அனிஷ் கானின் மரணத்திற்கு காரணமானவர்கள் கைது செய்யப்பட்டு, கடுமையான தண்டனை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அனிஷ்கானை இழந்துவாடும் அவரது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிக்கும் விதமாகவும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அலியா பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என மாணவர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

அனிஷ்கானின் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறிய இந்திய மாணவர் சங்கத்தின் தேசிய இணை செயலாளர் தீப்ஷிதா தார் மற்றும் மாநில தலைவர் பிரதிகூர் ரஹ்மான் ஆகிய மாணவர் சங்க பிரதிநிதிகள் கூறிகையில், சில காலமாகவே அனிஷ்கான் குறிவைக்கப்பட்டு இருக்கிறார். உள்ளூர் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களுக்கு இதில் தொடர்பிருக்கலாம் என நாங்கள் சந்தேகிக்கிறோம் என கூறியுள்ளனர்.